Select Menu

clean-5

Wisata

Budaya

Kuliner

Kerajaan

kota

Suku

கம்ப்யூட்டரில் பேக்கப் எடுக்கப்பட வேண்டிய முக்கியமான பைல்கள்

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் அதில் உள்ள டேட்டாவினை குறிப்பிட்ட கால அவகாசத்தில் அல்லது தினந்தோறும் பேக்கப் எடுத்து வைக்க முயற்சிப்பதே இல்லை. இதற்குக் காரணம் நம் கம்ப்யூட்டர் என்ன நின்றா போய்விடும்? என்ற தவறான எண்ணப் போக்குதான். இந்த தவற்றைப் பலர் செய்கின்றனர். முக்கியமான பைல் களைப் பேக்கப் எடுப்பதில்லை. ஒரு சிலருக்கோ முக்கிய மான பைல்கள் எவை என்று தெரிவதில்லை.
எந்தெந்த பைல்களை எல்லாம் பேக்கப் எடுக்க வேண்டும்? நீங்கள் உருவாக்கிய எல்லா பைல்களையும் (வேர்ட், எக்செல், அக்சஸ், பவர்பாயிண்ட் பைல்கள்) பேக்கப் எடுக்க வேண்டும். எழுத்து வகைகள், ஐகான்கள், கர்சர்கள், வால்பேப்பர்கள், தீம்கள், ஸ்கிரீன்சேவர்கள், எம்பி3 பைல்கள், வீடியோ பைல்கள் என இண்டர்நெட்டில் இருந்து டவுன்லோடு செய்த எல்லா பைல்களையும் பேக்கப் எடுக்க வேண்டும். இமெயில்கள், இமெயில்களின் விதிகள், பேவரிட் தளங்கள், முகவரி புத்தகங்கள், நண்பர்கள் பட்டியல்கள் என இண்டர்நெட் சேவைகள் தொடர்பானவற்றையும் பேக்கப் எடுக்க வேண்டும். இவற்றை பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.

உங்களது பைல்கள்:
எம்எஸ் வேர்ட், எம்எஸ் எக்செல் போன்ற பெரும்பாலான அப்ளிகேஷன்கள் வழியாக நீங்கள் உருவாக்குகிற பைல்களை My Documents என்ற போல்டரில்தான் கம்ப்யூட்டர் சேமிக்கும். எனவே இந்த போல்டரைப் பேக்கப் எடுக்க வேண்டும்.
விண்டோஸ் எக்ஸ்பி கம்ப்யூட்டர்களில் படங்களை My Pictures போல்டரிலும், ஆடியோ பைல்களை My Music போல்டரிலும், வீடியோ பைல்களை My Video போல்டரிலும் போட்டு வைக்கும். இந்த போல்டர்கள் எல்லாமே My Documents போல்டரின் கீழ்தான் வருகின்றன. எனவே My Documents போல்டரை பேக்கப் எடுத்தால் இவையும் தாமாகவே பேக்கப் ஆகிவிடும்.

மைக்ரோசாப்ட் ஆபீஸ் செட்டிங்:
மைக்ரோசாப்ட் ஆபீஸ் அப்ளிகேஷனைப் பயன்படுத்துகிறவர்கள் பல செட்டிங்களை அங்கு கொடுத்திருக்கலாம். மெனு, டூல்பார், டெம்ப்ளேட் போன்ற செட்டிங்கள், இமெயில் விதிகள் எனப் பலவற்றை பேக்கப் எடுக்க Save My Settings Wizard என்ற ஒன்றை ஆபீஸ் எக்ஸ்பி தந்துள்ளது. ஆபீஸ் எக்ஸ்பி சிடி டிஸ்க்கில் உள்ள இதை நிறுவினால் மைக்ரோசா ப்ட் ஆபீஸ் தொடர்பான எல்லா செட்டிங்குகளையும் பேக்கப் எடுக்கலாம்.

எழுத்து வகைகள்:
பல அப்ளிகேஷன்களை உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவும் பொழுது அவை தங்களுக்கு வேண்டிய எழுத்து வகைகளை உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவி இருக்கும். இண்டர்நெட்டில் இருந்து பல எழுத்து வகைகளை உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுன்லோடு செய்திருப்பீர்கள். C:/windows போல்டரின் கீழ் Fonts என்ற பெயரில் உள்ள போல்டரில்தான் எல்லா எழுத்து வகைகளும் காணப்படும். இதை பேக்கப் எடுங்கள்.

இன்டர்நெட் விவரங்கள்:
இன்டர்நெட் வெப் தளங்களில் நீங்கள் நுழைந்தவுடன் இந்த தளங்களுக்கு மீண்டும் வர வேண்டும் என்ற ஆவல் பிறக்கலாம். அப்படிப்பட்ட தளங்களை நினைவில் வைத்துக் கொள்ளும்படி பிரவுசருக்கு தெரிவிக்க முடியும். இதற்காகவே Bookmarks அல்லது Favorites என்ற மெனு பிரவுசரில் காணப்படும்.
பிரவுசருக்கு அடையாளம் காட்டப்பட்ட வெப் தளங்களின் பட்டியல் Bookmarks அல்லது Favoritesல் சேமிக்கப்பட்டிருக்கும். இந்த பட்டியலை பேக்கப் எடுக்க வேண்டும். எப்படி பேக்கப் எடுப்பது என்பது பிரவுசரை பொறுத்து மாறுபடும். எடுத்துக்காட்டாக இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் File=>Import and Export கட்டளை மூலம் அந்த பேவரிட் பட்டியலை ஒரு பைலில் சேமித்து பின்பு அந்த பைலை பேக்கப் எடுக்க வேண்டும்.
உங்களுக்கு வந்துள்ள இமெயில்களை நீங்கள் பேக்கப் எடுக்க வேண்டும். மேலும் உங்கள் இமெயில் அக்கவுண்ட் பற்றிய விவரங்கள், முகவரி புத்தகம், இமெயில் வடிகட்டல் விதி, சிக்னேச்சர் போன்றவற்றையும் பேக்கப் எடுக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் இமெயில் புரோகிராமில் எப்படி பேக்கப் எடுப்பது என்பதை தெரிந்து கொண்டு அதன்படி செயல்படுங்கள்.
விண்டோஸின் Find அல்லது Search கட்டளை மூலம் BMP, JPG, JPEG, GIF, SCR, WAV, MDI, MP3, MPG, DAT போன்ற பைல்கள் கம்ப்யூட்டரில் எங்குள்ளன என்று தேடி அவற்றை பேக்கப் எடுப்பது நல்லது. 

BIOS( பயாஸ்)


 

கம்ப்யூட்டரின் அடிப்படை உள்ளீடு /வெளியீடு கட்டமைப்பினையே பயாஸ் (BIOS basic input/output system) என்கிறோம். இந்த கட்டமைப்பினைக் கொண்டுள்ள சாப்ட்வேர் புரோகிராம், கம்ப்யூட்டர் ஒன்று இயங்கத் தொடங்குகையில், அதில் உள்ள, இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் (ஹார்ட்வேர், சவுண்ட்கார்ட், கீ போர்ட், மவுஸ் போன்றவை) அனைத்தும் சரியாக உள்ளனவா என்று சோதனை செய்து, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இயக்க அனுமதிக்கிறது. இந்த ஹார்ட்வேர் சாதனங்களுக்கான சோதனையை POST– poweron selftest என அழைக்கிறோம். இந்த சோதனை முடிவு சரியாக இருந்தால் தான், இந்த சாப்ட்வேர் புரோகிராம், கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டினை ஆப்பரேட்டிங் சிஸ்டத்திடம் ஒப்படைக்கும்.
ஒவ்வொரு பெர்சனல் கம்ப்யூட்டரிலும் ஒரு பயாஸ் சிஸ்டம் இருக்கும். சில வேளைகளில் இந்த சிஸ்டத்தினையும் நாம் திறந்து பார்த்து, அதில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். இந்த பயாஸ் உள்ளாக, ஒரு பாஸ்வேர்டை செட் செய்திடலாம்; ஹார்ட்வேர் சாதன நிர்வாகத்தினை அமைத்திடலாம்; கம்ப்யூட்டர் எந்த சாதனங்கள் வழியாக பூட் செய்யப்பட வேண்டும் என்பதனை நிர்ணயம் செய்திடலாம்.
பயாஸ் புரோகிராமிற்கான இன்டர்பேஸ் விண்டோவினை எளிதாக நாம் அணுகி அதில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். ஆனால், மிக எச்சரிக்கையுடன் மட்டுமே பயாஸ் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். எனவே மாற்றங்களை ஏற்படுத்துகையில், அதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியவில்லை என்றால், எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடாது.
பயாஸ் அமைப்பில் நுழைந்திட என்ன செய்திட வேண்டும் என்பதனை இங்கு காணலாம். கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கியவுடனேயே, பயாஸ் தன் சோதனையை மேற்கொண்டு, விண்டோஸ் சிஸ்டத்திடம் பொறுப்பை ஒப்படைக்க சில விநாடிகள் தான் எடுத்துக் கொள்ளும். எனவே பயாஸ் அமைப்புக்குள் நுழைய விரும்பினால், விரைவாக அதனை நிறுத்தி நுழைய வேண்டும். இதற்கான வழியைப் பார்க்கலாம்.
கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கியவுடன் முதல் திரை காட்டப்படும். அதில் எந்த கீயை அழுத்தினால், பயாஸ் அமைப்பிற்குள் நுழையலாம் என்று காட்டப்படும். அது F1, F2, or F3 ஆகியவற்றுள் ஒன்றாக இருக்கலாம். Esc அல்லது Delete அல்லது கீயாக இருக்கலாம்.
சில கம்ப்யூட்டர்களில் இந்த கீகளுடன் இன்னொரு கீயினைச் சேர்த்து அழுத்த வேண்டியதிருக்கலாம். எனவே முதலில் காட்டப்படும் பக்க செய்தியைக் கவனமாகக் காணவும். அந்த செய்திகள் கீழ்க்குறிப்பிட்டவற்றுள் ஒன்றாக இருக்கலாம்.
‘Press F1 to enter setup’
‘BIOS settings: Esc’
‘Setup = Del’
‘System configuration: F2'

இதனை முதல் முயற்சியிலேயே பார்க்க இயலாவிட்டால், மீண்டும் கம்ப்யூட்டரை பூட் செய்து காணவும். பயாஸ் அமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு முன், ஏற்கனவே உள்ள செட்டிங்ஸ் குறித்து ஒரு தாளில் குறித்துக் கொள்ளவும். அல்லது பயாஸ் விண்டோவின் ஸ்கிரீன் ஷாட் ஒன்றை எடுத்துவைத்துக் கொள்ளவும். அதன் பின் மாற்றங்களை மேற்கொள்ளலாம். பொதுவாக, கம்ப்யூட்டர் எந்த சாதனங்கள் வழியாக பூட் செய்வது என்று அமைப்பதுதான் இதில் பலரும் மேற்கொள்ளும் வேலையாக இருக்கும். ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஹார்ட் டிஸ்க்கில் அமைக்கப்படுவதால், முதலில் ஹார்ட் டிஸ்க் வழியாகப் பூட் செய்திடும்படி அமைப்போம். இதில் பிரச்னை ஏற்பட்டால், சிடியில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வைத்துக் கொண்டு, முதலில் சிடி வழியாக ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தேடும் வகையில் அமைக்கலாம். எந்த மாற்றங்களை ஏற்படுத்தினாலும், பயாஸ் விண்டோவினை விட்டு வெளியேறுகையில், மாற்றங்களை சேவ் செய்திட வேண்டும். இதற்கெனக் காட்டப்படும் மெசேஜ் விண்டோவினைப் பார்த்துச் சரியான கீகளை அழுத்தி சேவ் செய்திட வேண்டும். சேவ் செய்த பின்னர், இந்த மாற்றங்களை இயக்க, மீண்டும் ஒரு முறை கம்ப்யூட்டரை பூட் செய்திட வேண்டும்

இணைய இணைப்பு எப்படி இயங்குகிறது?

எங்கோ ஒரு மூலையில் இயங்கும் கம்ப்யூட்டரில் உள்ள தகவலை, பாட்டை, சினிமாவை, விளையாட்டை எப்படி இன்டர்நெட் நம் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வருகிறது? என்ற கேள்வி இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இருக்கும். தெளிவான மற்றும் நிறைவான பதில் கிடைக்காததால் கேள்வியாகவே தொடரும் நிலையும் உள்ளது. இங்கு எப்படி உங்கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட் மூலம் தகவல் கள் வந்தடைகின்றன என்று பார்க்கலாம்.
கம்ப்யூட்டரை இயக்கி இன்டர்நெட் இணைப்பை உயிர்ப்பித்து பிரவுசரின் அட்ரஸ் பாரில் ஓர் இணையதளத்தின் முகவரியை டைப் செய்து என்டர் தட்டுகிறீர்கள். பிரவுசர் எதுவாக வேண்டுமானாலும் -- இன்டர் நெட் எக்ஸ்புளோரர், மோஸில்லா பயர்பாக்ஸ், சபாரி, கிரேஸி பிரவுசர், பிளாக் -- என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதனை "கிளையண்ட்' என அழைக்கிறோம். தற்போதைக்கு "வாடிக்கையாளர்' என வைத்துக் கொள்வோம். இந்த வாடிக்கையாளர் நீங்கள் தேவை என்று சொன்ன, இணைய தளம் வேண்டும் என்று சொன்ன உங்கள் வேண்டுகோளை உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது. அந்த சர்வர், தான் இணைக்கப்பட்டுள்ள இன்னொரு சர்வருக்கு அதனை அனுப்புகிறது. அந்த சர்வரும் அரசாங்க அலுவலகத்தில் ஒரு பைல் மேஜைக்கு மேஜை போகிற மாதிரி அப்படியே அனுப்புகிறது. ஐ.எஸ்.பி. சர்வரிலிருந்து இந்த வேண்டுகோள் "வெரி ஹை ஸ்பீட் நெட்வொர்க்' என்னும் அதிவேக வழியில் செல்கிறது. இப்படியே சென்று நீங்கள் டைப் செய்த முகவரி உள்ள தளத்தை அடைகிறது. அதனை "உபசரிப்பவர்' என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். அந்த உபசரிக்கும் சர்வர் பின் நீங்கள் கேட்டுக் கொண்டபடி தன் தளத்தில் உள்ள தகவல்களை பாக்கெட் பாக்கெட்டாக உங்கள் வேண்டுகோள் பயணித்த அதே பாதையில் உங்கள் ஐ.எஸ்.பி. நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது. நீங்கள் இணைப்பு பெற்றிருக்கும் அந்த நிறுவன சர்வர் பின் அதனை உங்கள் கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறது. இவ்வளவு தானா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் விஷயம் அவ்வளவு எளிது அல்ல. இதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ள விஷயமும் உள்ளது.
நாம் ஒரு இணைய தளத்தின் முகவரியை சொற்களில் அமைத்து அனுப்புகிறோம். இந்த சொற்கள் கம்ப்யூட்டருக்குத் தெரியாதே? எனவே தான் கம்ப்யூட்டர்கள் அறிந்து புரிந்து கொள்ளும் பாஷையில் மாற்றி அனுப்ப வேண்டியதுள்ளது. இதற்கு புரோட்டோகால் என்னும் வழிமுறை உதவுகிறது. புரோட்டோகால் என்பது இரண்டு கம்ப்யூட்டர் கள் இடையே தகவல் பரிமாறிக் கொள்ள அமைக்கப்பட்ட சிஸ்டம் எனச் சொல்லலாம். இது டி.சி.பி., ஐ.பி., எச்.டி.டி.பி., எப்.டி.பி., எஸ்.எம்.டி.பி., மற்றும் வை-பி (TCPIP, HTTP, FTP, SMTP WiFi) எனப் பலவகைப்படும். நாம் பொதுவாக டி.சி.பி - ஐ.பி. பயன்படுத்துவதால் அது குறித்து காண்போம்.
இன்டர்நெட்டில் இணைக்கப்படும் ஒவ்வோரு கம்ப்யூட்டருக்கும் ஒரு ஐ.பி. அட்ரஸ் தரப்படுகிறது. இது சொல்லில் இருக்காது. 0 லிருந்து 255 வரையிலான எண்களின் கோர்வையாக இருக்கும். எடுத்துக்காட்டாக www.yahoo.com என்னும் தளம் உள்ள சர்வரின் எண் 82.248.113.14 ஆகும். இது இதன் நிலையான எண். உங்கள் கம்ப்யூட்டர் நெட்டில் இணையும்போது உங்களுடைய ஐ.எஸ்.பி. உங்களுக்கு ஒரு முகவரியை எண்களில் ஒதுக்கும். ஆனால் அது நிலையானது அல்ல. நீங்கள் அப்போது இன்டர்நெட்டில் இருக்கும் வரையில் அந்த முகவரி உங்களுக்குச் சொந்தமானது. முடித்துவிட்டு மீண்டும் செல்கையில் மீண்டும் ஒரு முகவரி வழங்கப்படும். இதற்குக் காரணம் ஒரு ஐ.எஸ்.பி. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர்களை நெட்டில் இணைக்க வேண்டியுள்ளதால் அவ்வப்போது எண்கள் தரப்படுகின்றன. இந்த எண்களின் கோவை நான்கு இலக்கங்களால் ஆன தொடராக ஒவ்வொரு எண்ணும் ஒரு புள்ளியால் பிரிக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக 123.467.87.23 என்றுகூட இருக்கலாம். இந்த எண்களிலான முகவரி முக்கியமானது. ஏனென்றால் இந்த முகவரியை வைத்துத்தான் இன்டர்நெட்டில் எந்த கம்ப்யூட்டர் வேண்டுகோளை வைத்தது; எந்த கம்ப்யூட்டரிலிருந்து தகவல் வர வேண்டியுள்ளது என்று தெரியவரும். டி.சி.பி. (Transmission Control Protocol) என்பது அனுப்பப்படும் தகவல்களைக் கையாளும் வழிமுறை. தகவல்களை சிறு சிறு பாக்கெட்களாகப் பிரித்துப் பின் மீண்டும் சேரும் இடத்தில் அவற்றை இணைத்து ஒழுங்காகத் தருவதே இந்த வழிமுறையின் செயல்பாடு. ஐபி அட்ரஸ் எங்கிருந்து எங்கு இந்த தகவல்கள் போய்ச் சேர வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. எனவே இந்த இரண்டு வழிமுறைகளும் இணைந்து தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்கின்றன.

அதென்ன தகவல் பாக்கெட்?
இன்டர்நெட் என்பது "பாக்கெட் ஸ்விட்ச்டு நெட் வொர்க்' என அழைக்கப்படுகிறது. இதற்கு மாறான நெட்வொர்க் "சர்க்யூட் ஸ்விட்ச்டு நெட்வொர்க்' என அழைக்கப் படுகிறது. சர்க்யூட் ஸ்விட்ச்டு நெட்வொர்க்கில் இணைப்பு ஏற்படுத்துகையில் அந்த இணைப்பை மற்றவர்கள் பயன்படுத்த முடியாது. ஆனால் பாக்கெட் ஸ்விட்ச்டு நெட்வொர்க் கைப் பலர் பகிர்ந்து கொள்ள முடியும். ஒரே நேரத்தில் பலர் கேட்கும் தகவல்கள் பிரித்து அனுப்பப்படுகின்றன. இவை அதனதன் சேரும் இடத்தைச் சேர்ந்தவுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு கேட்பவரிடம் தரப்படுகின்றன. ஒவ்வொரு பாக்கெட் தகவலிலும் ஏறத்தாழ 1500 கேரக்டர்கள் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஹெடர்கள் அமைக்கப் பட்டு அனுப்பப் படுகின்றன. இந்த ஹெடர்களில் இந்த பாக்கெட்கள் எப்படி இணைக்கப்பட வேண்டும் என எழுதப்பட்டிருக்கும். அதற்கேற்ற வகையில் இவை இணைக்கப்படும். ஒரு எடுத்துக் காட்டைப் பார்ப்போம். பழைய காலத்து அகலமான திறப்பு கொண்ட கடைகளில் அகலமான கதவு இருந்தால் அதனை திறந்து வைத்தால் அதிக இடம் பிடிக்கும் என்பதால் சிறு சிறு பலகைகளை மேலும் கீழும் அவற்றைக் கொள்வதற்கான சிறிய பள்ளங்களை ஏற்படுத்தி செருகி பின் ஒரு பெரிய இரும்பு பாளத்தில் இணைத்து பூட்டு போடுவார்கள். காலையில் இதனைத் திறந்தவுடன் இந்த பலகைகளைக் கழற்றி ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைத்திடுவார்கள். மீண்டும் கடையைப் பூட்டுகையில் சரியாக வைப்பதற்காக கதவில் எண் அல்லது வேறு குறியீடுகளை அமைத்திருப்பார்கள். இதே போல் தான் சிறு சிறு பொட்டலங்களில் தகவல்கள் செலுத்தப்படுகின்றன. தேவை எனக் கேட்ட கம்ப்யூட்டரை அடைந்தவுடன் அவை ஒன்று சேர்க்கப்பட்டு தரப்படுகின்றன. ஒவ்வொரு ஹெடரிலும் "செக்சம்' (Checksum) எனப்படும் ஒரு எண் தரப்படும். இந்த எண் மூலம் வரவேண்டிய தகவல் சிந்தாமல் சிதறாமல் வந்து விட்டதா என்று அறியப்பட்டு இணைக்கப்படும். இந்த வேலையை டி.சி.பி. வழிமுறை செயல்படுத்துகிறது.
இப்போது முதல் செயலுக்கு வருவோம். நீங்கள் சொற்களில் டைப் செய்திடும் முகவரி எந்த இடத்தில் எண்களாகக் கம்ப்யூட்டருக்கு ஏற்றபடி மாறுகிறது? நீங்கள் டைப் செய்த முகவரியை வைத்துக் கொண்டு உங்கள் ஐ.எஸ்.பி. சர்வர், "டொமைன் நேம் சர்வர்' (Domain Name Server DNS) என்ற ஒன்றை நாடுகிறது. இந்த சர்வரே நீங்கள் தந்த முகவரியின் பெயரின் அடிப்படையில் தேடுதலைச் சுருக்கித் தேடி முகவரிக்கான எண் தொகுப்பை ஐ.எஸ்.பிக்கு வழங்குகிறது. பின் அந்த எண் முகவரியை அடிப்படையாகக் கொண்டு இன்டர்நெட்டில் தேடல் தொடங்கி குறிப்பிட்ட சர்வரை அடைகிறது. பின் முன்பு கூறியபடி தகவல்கள் கிடைக்கின்றன.

விண்டோஸ் 8 - புதிய தகவல்கள்

தன் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8 எப்படி இருக்கப்போகிறது என மைக்ரோசாப்ட் நிறுவனம், அண்மையில் நடைபெற்ற தொழில் நுட்பக் கருத்தரங்குகளில் தெரிவித்துள்ளது. தைபே நாட்டில் இது குறித்து உரையாற்றிய மைக்ரோசாப்ட் வல்லுநர் மைக்கேல் உறுதியான சில அம்சங்கள் குறித்து கூறியுள்ளார்.
தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பார்க்கையில், விண்டோஸ் 8, குறைந்த மின்சக்தியில் இயங்கும் ஏ.ஆர்.எம். சிப்களில் செயல்படக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. திரை தொட்டு இயக்கும் திறனும், எச்.டி.எம்.எல். 5 தொழில் நுட்பத்துடன் இணைந்து செயல்படும் திறனும் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
மக்களுக்குப் பயன்படும் விஷயங்களில், முதலாவதாக, விண்டோஸ் 8 சிஸ்டம் இயங்க, இப்போது விண்டோஸ் 7 பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களை மாற்ற வேண்டிய தேவை இருக்காது. ஏற்கனவே விஸ்டா சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதனை இயக்க புதிய ஹார்ட்வேர் சாதனங்களுடன் கூடிய பெர்சனல் கம்ப்யூட்டர் தேவை என்ற கட்டாயத்தினை மைக்ரோசாப்ட் முன்வைத்ததனால், விஸ்டா கம்ப்யூட்டர் பயனாளர்களிடம் சென்றடையாமல் போனது. அந்த தவற்றை மீண்டும் செய்திடாமல் இந்த முறை மைக்ரோசாப்ட் விழித்துக் கொள்கிறது. எனவே கோடிக்கணக்கான கம்ப்யூட்டர்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு எளிதாக மாறிக் கொள்ளலாம். ஹார்ட்வேர் தேவைக்கென செலவு இருக்காது. புதிய கம்ப்யூட்டர் வாங்கினால் தான், விண்டோஸ் 8 பயன்படுத்த முடியும் என்ற நிலையை உருவாக்கி, புதிய சிஸ்டம் மக்களிடம் செல்லாத ஓர் சூழ்நிலையை ஏற்படுத்தக் கூடாது என மைக்ரோசாப்ட் மிகக் கவனமாக இம்முறை செயல்படுகிறது.
அடுத்ததாக, விண்டோஸ் 8 பயன்படுத்த இருக்கும் யூசர் இன்டர்பேஸ் எனப்படும் பயன்படுத்துபவருக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு இடையே உள்ள செயல்பாட்டை எளிதாக்கும் வழி முறை ஆகும். இதனை Immersive UI என மைக்ரோசாப்ட் அழைக்கிறது. "கவனத்தை முழுவதும் கவர்ந்த இடைமுகம்' என்பது இதன் பொருள். புதிய மற்றும் பழைய ஹார்ட்வேர் கொண்ட கம்ப்யூட்டர் அனைத்திலும் தன்னை மாற்றிக் கொண்டு இயங்கும்படி இது அமைக்கப்படுகிறது. இந்த இடைமுகம் சரிப்பட்டு வராது என எண்ணுபவர்கள், வழக்கம்போல, தற்போதைய ஏரோ வகை இடைமுகத் தினைப் பயன்படுத்தலாம்.
விண்டோஸ் 8 சிஸ்டம் தொடுதிரையில் தொட்டு இயக்கும்படியாக அமைக்கப் படுகிறது. எனவே இதன் முழுப் பயனும் தொடுதிரை உள்ள மானிட்டர்களைக் கொண்டு பெர்சனல் கம்ப்யூட்டர்களை இயக்குபவர்களுக்குக் கிடைக்கும். தொடுதிரை செயல்பாடு மட்டுமின்றி, பல வகையான சென்சார் செயலாக்கமும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தரப்பட்டுள்ளது. இதனால் மோஷன் செயலாக்கம், திரைக்கு அருகில் செல்லும் தூரம் ஆகியன மூலமும் சில பயன்பாடுகள் கிடைக்கும். தொடுதிரை மானிட்டர்கள் இல்லாதவர்களுக்கு வழக்கம்போல பயன் பாட்டினை மேற்கொண்டு அனுபவிக்கலாம்.
புதிய இடைமுகத்தில் பெரிய அளவில் வண்ணங்களில் ஐகான்கள் அமைக்கப் படுகின்றன. விண்டோஸ் போன் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தரப்படும் தொழில் நுட்பமும் தோற்றமும் இந்த வகையில் தரப்படுகின்றன. இருப்பினும் தற்போதைய பழக்கப்படி மவுஸ் மற்றும் கீ போர்டு மூலமும் சிஸ்டத்தினை இயக்கலாம். பேஜ் அப் மற்றும் பேஜ் டவுண் கீகள் மூலம் அப்ளிகேஷன் டைல்ஸ் இடையே செல்லலாம். ஒரு மவுஸ் கிளிக் மூலம் இவற்றை இயக்கலாம். கீ போர்டில் இப்போது போல, ஷார்ட் கட் கீகள் மூலமும் இயக்கலாம்.
இருப்பினும் சில விஷயங்களை இப்படித் தான் இருக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் கூறி வருகிறது. மானிட்டர் திரை விண்டோஸ் 8 சிஸ்டத்தின் முழுமையான பயன்களைப் பெற வேண்டும் என்றால், திரை 16:9 என்ற வகையில் ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டு அமைக்கப்பட வேண்டும். 1366x768 என்ற ரெசல்யூசனுக்குக் குறையாமல் திரை இருக்க வேண்டும். 1024x768 என்ற ரெசல்யூசனில் உள்ள திரைகளிலும் இந்த சிஸ்டத்தின் பயன்பாடுகள் கிடைக்கும் என்றாலும், 1366x768 என்ற வகைதான் சிறப்பான பயன்பாட்டினைத் தரும் என்று மைக்ரோசாப்ட் கூறுகிறது.
விண்டோஸ் 8 எப்போது வெளியாகும் எனச் சரியான தேதி அறிவிக்கப் படவில்லை. ஆனால் எப்படியும் 2012ல் வெளியாகும் என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
எனவே விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரும்போது, அதனைத்தான் பயன்படுத்த வேண்டும் என விரும்பும் வாடிக்கையாளர்கள், இப்போதே மேலே கூறப்பட்ட மானிட்டர்களையும், தற்போதுள்ள ஹார்ட்வேருக்குச் சற்று கூடுதலான திறன் கொண்ட கம்ப்யூட்டர் களையும் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

Unique News